Saturday 4th of May 2024 06:24:20 PM GMT

LANGUAGE - TAMIL
-
கிழக்கில்  1776 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

கிழக்கில் 1776 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!


கிழக்கு மாகாணத்தில் பேலியகொட மீன்சந்தையுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் என 1776பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுள் நேற்று மாலை வரையில் 466பேர் பிசிஆர் சோதனைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புபட்டவர்கள் 52பேர் பீசிஆர் பரிசோதனையின்போது தொற்று அடையாளம்காணப்பட்டு அனைவரும் வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பெகலியகொட மீன்சந்தையில் ஏற்பட்ட கொத்தணியிலிருந்து கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் பெகலியகொட மீன்சந்தையுடன் தொடர்புபட்ட ஒன்பது நபர்கள் கொரொனா தொற்றுடையவர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளார்கள். இறுதியாக திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் மூன்று நபர்கள் பி.சீ ஆர் பரிசோதனையின்போது தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை கோறளைப்பற்று மத்தியில் நேரடியாகவும் அந்த நபர்களுடன் சம்பந்தப்பட்டவர்களுமாக 29நபர்கள்

பி.சீ ஆர் பரிசோதனையின்போது தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

ஓட்டமாவடி பிரதேசத்தில் ஒரு நபரும் இன்று காலை கிடைத்த பி.சீ ஆர் பரிசோதனையின் முடிவுகளின்படி வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பெரியபோரதீவு பட்டாபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பி.சீ ஆர் பரிசோதனையின்போது தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த நபர் அண்மையில் கொழும்பு பம்பலபிட்டிய பிரதேசத்திலிருந்து கடந்த 22ஆம் திகதி பேருந்து மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்துள்ளார். அந்த பேருந்தில் பல நபர்கள் பயணம் செய்துள்ளார்கள். இந்த நபருடன் சம்பந்தப்பட்ட குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் இந்த பேருந்து சம்பந்தமாக தொடர்ச்சியாக நாங்கள் நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கின்றோம்.அவர்களை சுயதனிமைப்படுத்தி அவர்களுக்கான காலம்வரும்போது பீசிஆர் பரிசோதனைகளுக்குட்படுத்தப்படுவார்கள்.

கல்முனை பிராந்தியத்தில் பொத்துவில் பகுதியில் 07பேரும் கல்முனையில் பகுதியில் 03நபர்களும் மருதமுனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளில் தலா ஓருவருமாக 12பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.இவர்கள் பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புகொண்ட நபர்களாகும்.பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புபட்ட எவரும் அம்பாறையில் அடையாளம் காணப்படவில்லை.

கிழக்கு மாகாணத்தில் பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புபட்டவர்கள் 52பேர் பீசிஆர் பரிசோதனையின்போது தொற்று அடையாளம்காணப்பட்டு அனைவரும் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் அவர்களின் காலத்திற்கேற்றவாறு பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தவும் தீர்மானித்துள்ளோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தாக்கம் மட்டுமன்ற டெங்கின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது. ஓட்டமாவடி,வாழைச்சேனை பகுதிகளில் டெங்கின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது.கடந்த வாரம் மட்டும் 48பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.இதில் கூடுதலானவர்கள் குழந்தைகளும் பெண்களுமாகும்.

தற்போது கொவிட் 19இனனும் காணப்படுவதனால் டெங்கு பாரிய சவாலாக மாறியுள்ளது.ஆனால் அனைத்து துறையினருடனும் இணைந்து வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு மற்றும் கொவிட்டை கட்டுப்படுத்த தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இப்பகுதியில் தொடர்ந்து தனிமைப்படுத்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. எதிர்காலத்தில் பீசிஆர் பரிசோதனையினை பொறுத்தே இதனை தளர்த்துவது தொடர்பான பரிந்துரையினை வழங்கமுடியும்.

விசேடமாக நான் மக்களிடம் வேண்டுவது கொரனா அச்சுறுத்தல் என்பது சுகாதார துறையினராலோ ஏனைய பாதுகாப்பு துறையினராலோ மட்டும் கட்டுப்படுத்தக்கூடிய விடயமல்ல.ஒவ்வொருவரும் தனிமனித சுகாதார நடைமுறையினை பின்பற்றுவதன் மூலமே இவற்றினை கட்டுப்படுத்தமுடியும்.பட்டாபுரத்தில் இனங்காணப்பட்டவர் தான் கொழும்பில் இருந்துவந்துள்ளதை சுகாதார துறையினருக்கு அறிவித்திருந்தால் அது தொடர்பிலான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கும். இவ்வாறு தங்களை அடையாளப்படுத்தி தங்களின் உண்மைத்தன்மையினை தெரிவிப்பதன் மூலம் கொரனா தொற்றினை கட்டுப்படுத்தமுடியும்.

தற்போது இந்த கொரனா தொற்றானது இளம் பராயத்தினர் மத்தியிலேயே தொற்றும் நிலை காணப்படுகின்றது.இது வயதுபோனவர்களுக்கு தொற்றும் நிலையேற்படுமானால் விளைவு அபாயகரமானதாக இருக்கும்.

பேலியகொட மீன் சந்தையின் தொடர்புடையவர்களின் வீட்டு உறுப்பினர்களுக்கு கொரனா தொற்றியுள்ளது தற்போது சிறிதுசிறிதாக உறுதிப்படுத்தப்பட்டுவருகின்றது.இந்த கொரனா தொற்று ஏற்படவில்லையென்ற பிழையான கருத்துகள் ஏழுந்துவருகின்றன.ஆனால் உண்மையில் அவ்வாறில்லை.தொற்றும் நிலையேற்பட்டுள்ளது.ஆனால் பீசிஆர் பரிசோதனைகளை உரிய காலத்தில் செய்யமுடியாத நிலையில் இருக்கின்றோம்.கிழக்கு மாகாணம் மட்டுமன்றி பொலநறுவைக்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள பீசிஆர் பரிசோனை இயந்திரம் ஊடாக பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதன்மூலம் ஒரு நாளைக்கு 200 பரிசோதனைகள் மட்டுமே செய்யமுடியும்.

கொரனா தொற்றாளர்கள் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என தொகை அதிகமாக நீண்டுசெல்லும் நிலையுள்ளது.அதுமட்டுமன்றி பீசிஆர் பரிசோனை செய்து தொற்று இல்லையென்று உறுதிப்படுத்தாலும் மீண்டும் அவர்கள் பீசிஆர் சோதனைக்குட்படுத்தவேண்டிய தேவையுள்ளது. ஏற்றவகையில் பீசிஆர் பரிசோதனை செய்யக்கூடிய நிலையில்லாத காரணத்தினால் தொற்றின் உண்மையான தன்மையினை கூறமுடியாத நிலையுள்ளது.

இன்னும் மட்டக்களப்பு மாவட்டம் உட்பட கிழக்கில் உள்ள மக்கள் இந்த நோயின் தாக்கத்தினை உணராதவகையிலேயே செயற்பட்டுவருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE